தச்சு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

தச்சு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Update: 2018-05-05 22:15 GMT
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். விழுப்புரம் நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், தச்சு தொழிலாளர் சங்க மாநில தலைவர் அப்பர் லட்சுமணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, சேவா சங்க பொருளாளர் உமாபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தச்சு தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும், நலிவடைந்த தச்சு தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட துணைத்தலைவர் பார்த்தசாரதி, விழுப்புரம் நகர தலைவர் சுப்பிரமணி, செயலாளர் மனோகர், பொருளாளர் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், விழுப்புரம் நகர துணைத்தலைவர் கணேசன், துணை செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்