கள்ளக்காதல் தகராறு: தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை, டீக்கடைக்காரர் கைது

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-05 22:30 GMT
சரவணம்பட்டி,

கோவை கீரணத்தம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரமூர்த்தி (வயது 45). இவரு டைய மனைவி லதா (38). இவர்கள் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் கோபி என்ற குமரவேல் (52). தனியார் கேபிள் டி.வி. நிறுவனத்தில் மாத தவணை தொகை வசூலிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

டீக்கடைக்கு டீகுடிப்பதற்காக கோபி அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருக்கு லதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ராமச்சந்திரமூர்த்தி மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் லதாவும், கோபியும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.

இதனால் ராமச்சந்திரமூர்த்திக்கும், கோபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரமூர்த்தி, கோபியை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்த நிலையில் நேற்று கீரணத்தம் ஐ.டி. பார்க் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ராமச்சந்திர மூர்த்தி மது குடித்து கொண்டு இருந்தார். அங்கு கோபியும் தனியாக உட்கார்ந்து மது குடித்து கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரமூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ராமச்சந்திரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்