ரெயில்வே கீழ்மட்ட பாலத்தில் மழைநீர் தேங்கியதால் அவதி: கோலார்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

கோலார்பட்டியில் உள்ள ரெயில்வே கீழ்மட்ட பாலத்தில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களிடம் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Update: 2018-05-05 22:30 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையேயான அகலரெயில் பாதை செல்கிறது. இந்த பாதையை பொதுமக்கள் கடந்து செல்ல ரெயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கியது.

இதன் காரணமாக சிஞ்சுவாடி, தேவநல்லூர், லட்சுமாபுரம், தென்குமாரபாளையம், நம்பியமுத்தூர் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கோலார்பட்டியில் உடுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் நடத்திய போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளது.

இதன் காரணமாக அவசர தேவைக்கு கோலார்பட்டி ஆஸ்பத்திரிக்கு வர முடியவில்லை. நம்பியமுத்துரில் இருந்து உடல்நிலை சரியில்லாத குழந்தையை ஆம்னி வேனில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். தண்ணீரில் வேன் இறங்கியதால் பழுதாகி நின்று விட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தேவநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர். எனவே தண்ணீரை வடிகட்டி விட்டு, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் தண்ணீரை உடனடியாக அகற்றவும், மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்