பாதாள சாக்கடை பணி முடிந்த பகுதிகளில் புதிய தார்ச்சாலை: காரைக்குடி தொழில் வணிக கழகம் வலியுறுத்தல்

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை பணி முடிந்த பகுதிகளில் புதிய தார்ச்சாலைகளை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று தொழில் வணிக கழகம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-05-05 21:30 GMT
காரைக்குடி,

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற பொது கணக்குக் குழு தலைவரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலை வருமான கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சுப.அழகப்பன், இணைச் செயலாளர் சையது ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை பணி ஒப்பந்தக் காரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தொழில் வணிக கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடைப் பணி முடிக்கப் பட்டு உள்ள சாலை மற்றும் தெருக்களில் தாமதமின்றி உடனே புதிய தார்ச்சாலை அமைத்திட வேண்டும், தோண்டப்பட்ட மண், சரளை கற்கள் குவியல்களை அகற்ற வேண்டும், பாதாள சாக்கடைக்காக ஆற்று மணலையே பயன் படுத்த வேண்டும், எம்.சாண்ட் மணலை பயன்படுத்தக் கூடாது, பல தெருக்களில் மேடு, பள்ளமாக உள்ள சாலைகளை உடனடியாக சமப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். 

மேலும் செய்திகள்