தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகள் குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும், கலெக்டர் லதா பேச்சு

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் லதா கூறினார்.

Update: 2018-05-05 22:30 GMT
சிவகங்கை,

மாவட்டத்தில் காசநோய் தடுப்பு குறித்து இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள் மற்றும் மருந்து விற்பனை சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி பேசியதாவது:-

காசநோயை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காசநோய் இல்லாத இந்தியா-2025 என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் காசநோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப 6 மாதம் முதல் 24 மாதம் வரை தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு நோய் முழுமையாக குணமடைவது உறுதி செய்யப்படுகிறது. பல இடங்களில் தனியார் ஆஸ்பத்திரிகளில் காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அரசுக்கு தெரிந்துள்ளது. இதனால் தற்போது தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் காச நோயாளிகள் குறித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு இதை கட்டயாமாக்கி உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அரசு தொடக்கத்திலேயே காசநோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியவும், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து முழுமையாக குணமடைவதை உறுதி செய்திடவும் நிக்சய் போஷன் யோஜனா திட்டத்தின்கீழ் அரசின் ஊட்டசத்து உதவித்தொகை வழங்கிடவும் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே காசநோய் இருப்பதை கண்டறியும் பரிசோதனை கூடம் நடத்துபவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் டாக்டர்கள், மருந்து விற்பனை செய்பவர்கள் ஒவ்வொரு மாதமும் காசநோயாளிகள் குறித்த விவரத்தை மாவட்ட காசநோய் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கிட வாய்ப்புள்ளது. எனவே காசநோய முற்றிலும் ஒழிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்தழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி, காசநோய் தடுப்பு துணை இயக்குனர் ராஜசேகரன், மருந்து ஆய்வாளர்கள் பிரபு, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்