நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தொடர் போராட்டம்

நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-05-05 22:30 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே தனியார் படகு குழாம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்பட சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எச்சரித்தார். அதையும்மீறி ஊழியர்களின் போராட்டம் நேற்று 11-வது நாளாக தொடர்ந்தது.

நோணாங்குப்பம் படகு குழாம் அருகே பந்தல் அமைத்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சம்மேளன கூட்டமைப்பு தலைவர் பாலமோகனன், சுற்றுலா வளர்ச்சி கழக கூட்டு போராட்டக்குழு தலைவர் கஜபதி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தின்போது தனியார் படகு குழாம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசை கண்டித்து ஊழியர்கள் கோஷமிட்டனர்.

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களின் போராட்டத்தால் நோணாங்குப்பம் படகு குழாம் நேற்றும் மூடப்பட்டு இருந்தது. நேற்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். ஆனால் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

மேலும் செய்திகள்