இலவச அரிசிக்கான கோப்பு அலைக்கழிக்கப்படுகிறது - அமைச்சர் கந்தசாமி வேதனை

இலவச அரிசிக்கான கோப்பு 25 நாட்களாக அலைக்கழிக்கப்படுகிறது என்று அமைச்சர் கந்தசாமி வேதனையுடன் கூறினார்.

Update: 2018-05-05 23:00 GMT
வில்லியனூர்,

ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிராம அபிவிருத்தி தின விழா நடைபெற்றது. விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.80 லட்சம் சுழல் நிதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் சுயதொழில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் பல்வேறு தடைகளை மீறி அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இதில் இலவச அரிசிக்கான கோப்பு 25 நாட்களாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. கவர்னர், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே அரிசி வழங்கவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வருமானத்துக்கு உட்பட்டவர்களுக்கு அரிசி வழங்க சட்டம் உள்ளது. இதில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களும் அடங்குவார்கள். இதை முறைப்படுத்தி இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பத்திரப்பதிவு தடை, சரக்கு மற்றும் சேவை வரி உள்பட பல்வேறு காரணங்களால் புதுவை அரசின் நிதி ஆதாரம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துள்ளது. இதுபோன்ற பல தடைகளால் அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இந்த விழாவில் வழங்கிய சுழல்நிதியை பயன்படுத்தி பெண்கள் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்