நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்துக்கு பயணம்: புதுச்சேரி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை, முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலத்துக்கு செல்லும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை மற்றும் பயணப்படி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-05-05 23:30 GMT
புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தமிழகத்தையும், புதுச்சேரியையும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதை தாமதப்படுத்த என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்த காலக்கெடு முடிவடையும் நேரத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு கொடுத்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உரிய காலத்தில் ஏன் விளக்கம் கேட்கவில்லை என மத்திய அரசை சாடியது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோடை காலத்தின் போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை வருகிற 8-ந் தேதி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே 2 முறை மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதுபோல் காலம் கடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் மாநிலத்திலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட வில்லை. எங்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அங்குதான் தேர்வு எழுத வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு நாளை (இன்று) நடைபெற உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தால் அங்கு செல்வதற்கு தேவையான பயணப்படி மற்றும் ரூ.1,500 உதவித்தொகை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இதன் மூலம் வெளிமாநிலம் செல்லும் மாணவ, மாணவிகள் அங்கு செல்வதற்கும், தங்குவதற்கும் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

நாளை(இன்று) தேர்வு நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் தேர்வை முடித்து விட்டு வந்து, தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மாணவரின் வங்கி கணக்கு சேமிப்பு புத்தகத்தின் முதல் பக்க நகல், இருவழி பயணச்சீட்டு ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து அந்த நிதியை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்த நிலையில் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட ஏழை மாணவ-மாணவிகள் 16 பேர் வெளியூர்களில் சென்று நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் தலா 2,500 ரொக்கப்பணம் வழங்கி, வழியனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்