சோரியாங்குப்பத்தில் பதுக்கி வைத்திருந்த 44 யூனிட் ஆற்று மணல் பறிமுதல்

சோரியாங்குப்பத்தில் பதுக்கி வைத்திருந்த 44 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-05 22:15 GMT
பாகூர்,

பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் டிராக்டர், டிப்பர் லாரி, மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வருவாய்த்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த துணை தாசில்தார் ராமச்சந்திரன் மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவருடன் ஊழியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதை அறிந்த கவர்னர் கிரண்பெடி, மணல் திருட்டுக்கு துணை போன துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். இதையடுத்து துணை தாசில்தார் ராமச்சந்திரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கவர்னர் கிரண்பெடியின் உத்தரவை தொடர்ந்து தென்பெண்ணையாறு, சங்கரா பரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி பள்ளம் தோண்டி செல்லும் வழித் தடங்களை துண்டித்து வருகின்றனர். வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்னையாற்று பகுதியில் வில்லியனூர் உதவி கலெக்டர் உதயகுமார் தலைமையில் வருவாய் துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தென்பெண்னையாற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு, சட்டவிரோதமாக 44 யூனிட் அளவுள்ள மணல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சோரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்று குவியல் குவியலாக இருந்த 44 யூனிட் மணலை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்