சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்

நாமக்கல் அருகே நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-05 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்டது சிவியாம்பாளையம் ஊராட்சி. அங்குள்ள பகவதி அம்மன் கோவில் திடல் அருகே நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சியை சேர்ந்த பசுபதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்திருமாளன் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, பணி மேற்பார்வையாளர் கீதா ஆகியோர் கூட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் வட்டார வள அலுவலரும், தணிக்கையாளருமான சாந்தி தணிக்கைக்கு உள்ளான கடந்த ஆண்டின் செலவு கணக்குகள் குறித்து வாசித்தார். அப்போது, தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி புரிந்தவர்களின் வருகை பதிவேடு, கோப்புகளை தணிக்கை செய்ததில், 46 பேரின் கையெழுத்து உள்பட சில விஷயங்களில் ஆட்சேபனை உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆட்சேஉள்ளானவர்கள் மொத்தமாக ரூ.7 ஆயிரத்து 75 திருப்பி செலுத்த வேண்டும், எனவும் அவர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளியேறி, கலைந்து செல்ல முற்பட்டனர். மேலும் தாங்கள் தான் கையெழுத்திட்டு பணத்தை பெற்றதாகவும், ஆனால் தற்போது அதில் சந்தேகம் என கூறுவதை ஏற்க முடியாது எனகூறி அதிகாரிகளுடன், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்திருமாளன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சேபனைக்கு உள்ளான கையெழுத்து குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், எனவே பணத்தை திருப்பி செலுத்த வேண்டாம் எனவும் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பெண்கள் மீண்டும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்