வழிப்பறி வழக்கில் திரைப்பட இயக்குனர் கைது

வழிப்பறி வழக்கில் திரைப்பட இயக்குனர் அரணாரை செல்வராசு கைது செய்யப்பட்டார்.

Update: 2018-05-05 22:15 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் கீழப்புலியூரை சேர்ந்தவர் கவிதா (வயது 43). இவர் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விட்டு பெரம்பலூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கவிதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 12 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் மங்களமேடு போலீசார் வாலிகண்டபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கைது

அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற காரை சோதனை நடத்தியபோது, அதில் கடப்பாரை, கத்தி, சுத்தியல், இரும்பு ராடு ஆகியவை இருந்தன. இதனையடுத்து போலீசார் காரில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் திரைப்பட இயக்குனர் அரணாரை செல்வராசு என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை, கொள்ளை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் அவர் தனது நண்பர்கள் திருநெல்வேலியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி, பாண்டி மற்றும் சிலருடன் சேர்ந்து கவிதாவிடம் நகையை பறித்து சென்றதும், மேலும் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திரைப்பட இயக்குனர் அரணாரை செல்வராசுவை கைது செய்தனர். மேலும் அவருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டவர்களையும் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்