வலங்கைமான் பகுதியில் சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன

வலங்கைமான் பகுதியில் சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

Update: 2018-05-05 22:45 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, சாலபோகம், குருவிகரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதனால் வயல்களில் இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.மேலும் சாலையோரங்களில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கோவிந்தகுடி பகுதியில் ஒரு மின்கம்பம் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. வெற்றிலை தோட்டங்களில் கொடிகள் சேதமடைந்தன.

விவசாயிகள் கவலை

இதுபற்றி தகவல் அறிந்த மின்சாரத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றியும், மின்பாதைகளை சீரமைத்தனர். காவிரி தண்ணீர் வராத நிலையில் பம்புசெட் மூலம் தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள், வெற்றிலை கொடிகள் சூறாவளி காற்றில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனனர். 

மேலும் செய்திகள்