நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.

Update: 2018-05-05 22:00 GMT
நெல்லை

நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆண்டுக்கான ஆய்வு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த ஆய்வு பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். அப்போது டிரைவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வருவது டிரைவர்களின் கடமை. எனவே அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக டிரைவர்கள் செல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுவதும், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதும் குற்றம் ஆகும். மேலும், அதிவேகமாக வாகனத்தினை இயக்கக் கூடாது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். 16 வகையான வாகன விதிகளை தனியார் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டும்.

தொடர்ந்து தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, மோட்டார் ஆய்வாளர்கள் மாணிக்கம், சரவணன், பத்மபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 294 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறைபாடு உள்ள வாகனங்களை சரிசெய்ய ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்