பாளையங்கோட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பாளையங்கோட்டையில் அரசு சார்பில் நேற்று நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Update: 2018-05-05 22:45 GMT
நெல்லை,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்பதுரை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில், கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

கிராம பஞ்சாயத்துகளில் மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு, தமிழ்நாடு அரசு கிராம பஞ்சாயத்துகளில் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 239 பஞ்சாயத்துகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டு, ரூ.1 கோடியே 35 லட்சம் சமுதாய நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 425 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றம் காண வேண்டும் என்று மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடியே 96 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மூலம் பல்வேறு தொழில்கள் தொடங்கும் வகையில், பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் மற்றும் கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்துகொண்டு, இளைஞர்கள் தனித்திறமைகளை வளர்த்து வேலைவாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும்.

முன்னதாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக ‘வெற்றி பயணம்’ எனும் குறுந்தகடு வெளியிடப்பட்டது. 16 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77 லட்சத்து 78 ஆயிரம் வங்கி கடனாகவும், 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு ரூ.6 லட்சத்து 74 ஆயிரம் வங்கி கடனாகவும், தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 34 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில், கிராம சுயாட்சி இயக்க மத்திய பார்வையாளர்கள் கலாதரன், பத்மநாபன், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி, முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்