காட்பாடி பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு

காட்பாடி பகுதி ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பணம் எடுக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Update: 2018-05-05 22:24 GMT
காட்பாடி,

காட்பாடி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் பல உள்ளன. இந்த வங்கிகள் சார்பில் காங்கேயநல்லூர் கூட்ரோடு, சில்க்மில் பஸ் நிறுத்தம், காந்திநகர், ஓடைபிள்ளையார் கோவில், காந்திநகர் ரவுண்டானா, சித்தூர் பஸ் நிறுத்தம், காட்பாடி, வள்ளிமலை கூட்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான சம்பளம் வங்கிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் சம்பள பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று காட்பாடி பகுதியில் உள்ள பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க சென்றவர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. பல்வேறு ஏ.டி.எம்.களுக்கு சென்றும் இதே நிலைதான் ஏற்பட்டது.

இந்த நிலையில் காங்கேயநல்லூர் கூட்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் மதிய வேளையில் அங்கு சென்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர். அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை ஏ.டி.எம். மையத்தில் இருந்து எடுத்து மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டு வாடகை, மளிகை பாக்கி, கேபிள் டி.வி. கட்டணம் போன்றவற்றுக்கு பணம் கொடுப்பார்கள். ஆனால் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் சம்பளதாரர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினார்கள்.

அதேபோல் கட்டிட தொழிலாளர்கள், கதவு, ஜன்னல் செய்யும் தொழிலாளர்கள், பெயிண்டர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அந்த வாரத்துக்கான கூலியை, ஒப்பந்ததாரர்கள் வழங்குவது வழக்கம். ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அனைத்து நாட்களிலும் ஏ.டி.எம். மையங்களில் போதுமான அளவு பணத்தை இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும் என்றும், மாதத்தின் முதல் வாரத்தில் பணத்தட்டுபாடு ஏற்படாத அளவு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள், வங்கி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்