ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதிகளில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-05-05 23:02 GMT
ஆவடி,

ஆவடி பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதையடுத்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் குற்ற வாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடியை அடுத்த சேக்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆவடி போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் திருநின்றவூர் ஏரிக்கரை தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா(வயது 20) மற்றும் திருநின்றவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன்(19) என்பது தெரிந்தது.

இவர்கள் இருவரும் சேர்ந்து ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது.

இவர்கள் மீது அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், ஆவடி போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி போலீசார் ராஜா, பிரவீன் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று மாலை 2 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்