கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை குழு

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

Update: 2018-05-06 00:05 GMT
பெங்களூரு,

கலபுரகி மாவட்டம் சேடம் பகுதியில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் 5 ஆண்டுகளில் 3,800 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனை காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் தொல்லையால் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு சித்தராமையா தலைமையிலான அரசு ரூ.1 லட்சம் மட்டும் நிதி உதவி வழங்கியுள்ளது. சித்தராமையா அரசு தூக்கத்தில் இருந்துள்ளது. மக்களும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைந்ததும், விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை அனைத்து வகையிலான பயிர்களுக்கும் கடன் வழங்கப்படும். இந்த பயிர்க்கடன் பூஜ்ஜிய சதவீத வட்டியில் வழங்கப்படும். பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளரான எடியூரப்பா, விவசாயிகளின் நண்பன். அவர் முதல்-மந்திரி ஆனால், விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பார். காங்கிரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. கேரளாவில் நடைபெறும் அரசியல் கொலைகள் போல், கர்நாடகத்திலும் அரங்கேறி வருகின்றன. இங்கு உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

அதேப் போல் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் கர்நாடகத்தில் அதிகரித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனி விசாரணை குழு அமைக்கப்படும். இந்த குழு பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் செயல்படும். மத்திய உள்துறை அமைச்சகம், போலீஸ் துறையில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய கோரி அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் எந்த விதமான வளர்ச்சிப் பணிகளையும் காண முடியவில்லை. இங்கு வளர்ச்சிப் பணிகளை காணவில்லை என போலீசில் புகார் தான் செய்ய வேண்டும். லிங்காயத் சமுதாயத்தை சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கடந்த 4 ஆண்டுகளாக சித்தராமையா முயற்சி செய்யவில்லை.

தேர்தல் வருகிறது என்பதை அறிந்ததும், அவசரம், அவசரமாக லிங்காயத் சமுதாயத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கி, சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுத்து மக்களை பிரிக்க அவர் முயற்சி செய்துள்ளார். மேலும் எடியூரப்பா ஆட்சியில் அமருவதை தடுக்கவே இத்தகையை நடவடிக்கையை சித்தராமையா எடுத்துள்ளார். இருப்பினும் கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்