காங்கிரஸ் அரசு மீது பிரதமர் கூறும் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்

காங்கிரஸ் அரசு மீது பிரதமர் மோடி கூறும் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முதல்-மந்திரி சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2018-05-06 00:08 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், துமகூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் நிதியை கர்நாடக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றும், காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேசி இருந்தார்.

பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். எந்த ஆதாரத்துடன் இந்த குற்றச்சாட்டை அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி கூறும் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். அதுபற்றி சிந்திக்கவும் மாட்டார்கள். கனிம வளங்களை கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்களை கொள்ளையடித்தது பற்றி கர்நாடக மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் சி.பி.ஐ. விசாரித்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி மாநில அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை கூறுகிறார். எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் கூறும் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ரெட்டி சகோதரர்கள் ஊழலில் ஈடுபட்டது பற்றி ஒரு 5 நிமிடமாவது பேசட்டும். கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிந்தால் பா.ஜனதா வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

இவ்வாறு சித்தராமையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்