கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் எடியூரப்பா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2018-05-06 00:11 GMT
சிவமொக்கா,

கர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமர் மோடி நேற்று கர்நாடகம் வந்தார்.

கதக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்காவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அவருடைய வயது, சமூக சேவையை மறந்து கீழ்தரமான வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிவமொக்கா மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எடியூரப்பாவை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க வேண்டும். அதாவது, சிவமொக்காவில் காங்கிரஸ் கட்சியினரை தோற்கடிப்பதுடன், அவர்களை டெபாசிட் கூட வாங்கவிட கூடாது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகத்தில் ஊழல் கரைப்படிந்தவரை முதல்-மந்திரி வேட்பாளராக மோடி அறிவித்துள்ளார் என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சி பிரிட்டீஷ் அரசு போல பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. சாதி, மதம், கலாசாரத்தின் பெயரில் காங்கிரஸ் கட்சி சமூகத்தை பிரிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். சாதி, மதம், கலாசாரத்தின் அடிப்படையில் தான் நீங்கள் குற்றவாளிகளை பிரிப்பீர்களா?. சாதி, மதம், கலாசாரம் அடிப்படையில் குற்றம் செய்தவர்களை, குற்றமற்றவர்கள் என்று சொல்வது சரிதானா?. அப்பாவி பா.ஜனதா தொண்டர்களை கொலை செய்த பி.எப்.ஐ., சிமி உள்ளிட்ட பயங்கரவாதிகளை காப்பாற்றியது தான் நீங்கள் (காங்கிரஸ்) கர்நாடகத்துக்கு கொடுத்த பரிசா?.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மந்திரிகளின் சொத்து மதிப்பு 2008-ம் ஆண்டு ரூ.70 கோடியாகவும், 2013-ம் ஆண்டு ரூ.250 கோடியாகவும், தற்போது வேட்புமனு தாக்கல் செய்தபோது ரூ.800 கோடியும் காட்டியுள்ளனர். இது தான் காங்கிரஸ் கட்சி செய்த வளர்ச்சியா?. எம்.எல்.ஏ. மற்றும் மந்திரியின் வீடுகள், அலமாரி, படுக்கை அறை, கழிவறை, சுவர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பதுக்கியது யார்?, அவர்களை சட்டசபைக்கு அனுப்பியது யார்? அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தது யார்?.

இவ்வாறு அவர் பேசினார்.

தோல்வியை சந்தித்து உள்ளது

இதனை தொடர்ந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் பா.ஜனதா தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும்.

காங்கிரஸ் போட்டியிட்ட எல்லா மாநிலங்களில் தோல்வியை சந்தித்து உள்ளது. அதுபோல கர்நாடகத்திலும் தோல்வியை தழுவும். எல்லையில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போதிலும் காங்கிரஸ் என் மீது தான் குற்றம்சாட்டியது.

நான் யோகா செய்ததை கூட அவர்கள் கிண்டல் செய்தார்கள். 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர். சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பா ஆகியோர் சங்பரிவாரை எதிர்த்தனர். சித்தராமையா ஆட்சியில் இந்து அமைப்பை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர்.

நாங்கள் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக கொடுத்த பணத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் மக்கள் கடமையை செய்யும்.

30 கோடி பேர் ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர். அதன் வங்கிக்கணக்கில் சரியாக பணம் போடப்பட்டு வருகிறது. அரசியல் லாபத்திற்காக தலாக் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. உஜ்வல் திட்டத்தின் கீழ் 4 கோடி குடும்பத்தினருக்கு கியாஸ் இணைப்பு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோடி சென்னய்யா, அப்பக்கா ராணி, நாராயணகுரு வசித்த கர்நாடக மண்ணில் பா.ஜனதா ஆட்சி மலரும்.

எடியூரப்பா விவசாயியின் மகன். அவரது ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்