பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஏட்டு பணியிடை நீக்கம்

பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2018-05-10 20:30 GMT
நெல்லை, 

பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் அல்போன்ஸ் (வயது 45). இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 8-ந்தேதியும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அல்போன்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கும் அவரது மனைவி வந்து தகராறு செய்தார்.

இதனால் மனம் வெறுப்படைந்த அல்போன்ஸ் போலீஸ் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். அதன்படி, ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து போலீஸ் ஏட்டு அல்போன்சை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று உத்தரவிட்டார். போலீஸ் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்