சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க கோரிக்கை

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-05-10 21:00 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.

60 சதவீத கூலி உயர்வு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் முக்கிய தொழில் விசைத்தறி தொழிலாகும். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கக்கோரி கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர். நேற்று 11-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊர்வலம்

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறியதன் பேரில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் அசோக்ராஜ், புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலம் லட்சுமியாபுரம் 4-ம் தெருவில் இருந்து தொடங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல்காதர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்