ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டுச் சென்ற மாணவர்கள் மதுரையில் கண்டுபிடிப்பு

வில்லியனூரில் பள்ளி கோடை விடுமுறையின்போது வேலைக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பாமல், ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மதுரையில் இருப்பதை கண்டுபிடித்து போலீசார் அவர்களை மீட்டு வந்தனர்.

Update: 2018-05-10 22:45 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்லா, டிரைவர். இவருடைய மகன் முகமது இர்பான் (வயது 14). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. இவருடைய மகன் முகமது பைசல் (13). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி வில்லியனூரில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தனர்.

சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்றனர். அதன்பின் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மகன்கள் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் வேலை முடிந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் தேடிப்பார்த்தபோதிலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் ஓட்டலில் வேலை பார்த்ததன் மூலம் கிடைத்த சம்பள பணத்தை வைத்து ஊர் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டனர். இதைத்தொடர்ந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினர். இதற்காக அவர்கள் பஸ் ஏறி மதுரை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாணவர் ஏற்கனவே உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தநிலையில் மதுரைக்கு அவர்கள் சென்று இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து வில்லியனூர் போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று மாணவர்கள் முகமது இர்பான் மற்றும் முகமது பைசல் ஆகிய இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்