கோடை வெயிலை சமாளிக்க மணப்பாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள் கடலில் குடும்பத்தினருடன் குதூகல குளியல்

கோடை வெயிலை சமாளிக்க, மணப்பாட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் கடலில் குதூகல குளியல் போட்டும், சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டும் மகிழ்ந்து வருகின்றனர்.

Update: 2018-05-10 21:15 GMT
உடன்குடி, 

கோடை வெயிலை சமாளிக்க, மணப்பாட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் கடலில் குதூகல குளியல் போட்டும், சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டும் மகிழ்ந்து வருகின்றனர்.

நீண்ட நெடிய கடற்கரை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை கிராமம் ஆகும். இங்கு நீண்ட நெடிய கடற்கரை அமைந்து உள்ளது. அதில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் தென்புறம் கடல் அலைகள் சீற்றம் அதிகமாகவும், வடபுறம் கடல் அலைகள் குறைந்து அமைதியாகவும் காணப்படுகிறது.

இதனால் கடல் அலைகள் குறைந்த வடபுறத்திலேயே சுற்றுலா பயணிகள் அனைவரும் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். மேலும் அங்கு மணல் திட்டுகள் உருவானதால், கடற்கரையில் ஆழம் குறைவான குட்டை போன்ற தண்ணீரில் குழந்தைகள் பயமின்றி குளித்து மகிழ்வர்.

இப்பகுதியானது அலைசறுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு உகந்த இடம் என்பதால், ஆண்டுதோறும் இங்கு தேசிய அலைசறுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. மேலும் சுற்றுலா மேம்பாட்டு துறை சார்பில், பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

குவியும் சுற்றுலா பயணிகள்

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர். மேலும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக, சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தினமும் காலை, மாலையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால் மணப்பாடு கடற்கரையில் அதிக கூட்டத்தை காணமுடிகிறது. சுற்றுலா பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, கடலில் குடும்பத்தினருடன் குதூகல குளியல் போடுகின்றனர். கடற்கரையில் மணல்திட்டால் உருவான குட்டையில் தேங்கி உள்ள கடல் நீரில் குழந்தைகள் தைரியமாக குளியல் போடுகின்றனர்.

பின்னர், மணல்குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம், புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், கலங்கரை விளக்கு போன்றவற்றுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்கின்றனர். மேலும், அந்த பகுதிகளில் அனைவரும் கடல் மற்றும் சுற்றுலா பகுதிகளை பின்னணியாக கொண்டு குடும்பத்தினருடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் மணப்பாடு களை கட்டி உள்ளது.

மேலும் செய்திகள்