செட்டிப்பாளையம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி காயம்

செட்டிப்பாளையம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி காயம் அடைந்தார்.

Update: 2018-05-10 22:45 GMT
போத்தனூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் மூச்சு திணறல் காரணமாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமானதால் நாகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நாகராஜை கொண்டு வந்தனர். ஆம்புலன்சை டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மருத்துவ உதவியாளர் ஸ்டாலின் என்பவர் வந்தார். நாகராஜுடன் அவரது உறவினர் 2 பேர் இருந்தனர்.

ஆம்புலன்ஸ் செட்டிப்பாளையம் அருகே மலுமிச்சம்பட்டியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனை பார்த்த டிரைவர் நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் வேனில் இருந்தவர்களை மீட்டனர். இதில் நாகராஜுக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக நாகராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கவிழ்ந்த வேன், பொக்லைன் எந்திரம் மூலம் கயிறு கட்டி தூக்கி நிறுத்தப்பட்டது.

இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்