இப்படியும் வாழ்கிறார்கள்: பேத்திகளுக்காக தள்ளாத வயதிலும் சுமை தூக்கும் தொழிலாளி

தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார் உலகநாதன்.

Update: 2018-05-10 23:30 GMT
வயதானவர்களின் ஆலோசனை எப்போதும் நல்லதுக்காக தான் இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் வயதான பெற்றோர்கள் இருந்தால் அது பாரமாகவே இருப்பதாக சிலர் கருதும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வயதான காலத்தில் ஒரு ஓரமாக இருக்கமாட்டிங்களா? ஏன் தொண தொணனு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க... உங்க வேலைய பாருங்க... என்ற சத்தம் பலருடைய வீட்டில் கேட்கும்.

இப்படிப்பட்ட சொற்களுக்கு சொந்தக்காரர்களான வயதானவர்கள், தங்களுடைய இளமை பருவத்தில் குடும்பத்துக்காக ஓடி தேய்ந்து, தளர்ந்து போன நேரத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டு மனம் நொந்து போகிறார்கள்.

ஆனாலும் சிலர் தங்களுடைய வயதான பெற்றோரை கடவுளாக பார்க்கும் குடும்பங்களும் உண்டு. இன்றளவும் வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் குடும்பங்களும் உண்டு.

அதேபோல், இளமை பருவத்தில் உழைக்கத்தொடங்கியவர்களில் பலர், வயதான காலத்திலும் இன்று வரை ஓயாமல் உழைத்து குடும்பத்தை தூக்கி நிறுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன் (வயது 65) என்பவர் தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார்.

ரெயில் நிலையங்களில் ‘அம்மா, அய்யா, சார், மேடம்..... லக்கேஜ் தூக்கணுமா?’ என்ற வார்த்தையை சுமந்தபடி, உடைமைகளை தூக்கி சுமப்பதற்காக குரல் கொடுக்கும் ‘போர்ட்டர்’களை(சுமை தூக்கும் தொழிலாளிகள்) ரெயில் பயணத்தின் போது நாம் பார்த்து இருப்போம்.

அந்த தொழிலை தான் உலகநாதன், 1979-ம் ஆண்டில் இருந்து கடந்த 39 ஆண்டுகளாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செய்து வருகிறார்.

இளமை பருவத்தில் ஓடிய வேகம் தற்போது இல்லை என்றாலும், மனம் தளராமல் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்காக உத்வேகத்துடன் ஒவ்வொரு நாளும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் சுமைகளை ஓடோடி தூக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.

இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது:-

பேத்திகள்

என்னுடைய மனைவி பெயர் புஷ்பா. எனக்கு 3 பெண் குழந்தைகள். என்னுடைய உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து 3 பேருக்கும் திருமணம் நடத்திவைத்தேன். இதில் முதல் மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு பக்கம் அதிர்ஷ்டம் என்று சொன்னாலும், மற்றொரு புறம் துரதிருஷ்டவசமாக என்னுடைய மகள் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்.

மகள் இறந்ததும், அவளுடைய கணவரும் குழந்தைகளை பற்றி கண்டுகொள்ளவில்லை. குழந்தைகளின் அழுகை சத்தம் என் மகள் இறப்பை விட அதிக வேதனையை தந்தது. நானும், என்னுடைய மனைவி புஷ்பாவும் எங்களின் பேத்திகளை எடுத்து வளர்க்க முடிவு செய்தோம்.

1979-ம் ஆண்டில் இருந்து நான் சென்னை சென்டிரலில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறேன். இளமை காலத்தில் நன்றாக ஓடி ஓடி உழைத்தேன். பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்ததும், ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்த நேரத்தில், மீண்டும் உழைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

மனவலிமை

முதலில் என்னுடைய மகள்களுக்காக உழைத்த நான், இப்போது என்னுடைய பேத்திகளுக்காக தள்ளாடும் காலத்திலும் உழைத்து வருகிறேன். இந்த தொழிலில் உடல் வலிமை மிகவும் அவசியம். பயணிகளின் உடைமைகளை பத்திரமாக கீழே விழாமல் கொண்டு வந்து சேர்த்தால் தான் பணம் தருவார்கள்.

அந்தவகையில் என்னுடை உடல் வலிமை இப்போது கொஞ்சம் தளர்ந்துவிட்டது. இருந்தாலும் மனவலிமையுடன் இந்த தொழிலை என்னுடைய பேத்திகளுக்காக செய்கிறேன். முடிந்தவரை உழைத்து அவர்களை கரைசேர்க்க முயற்சிக்கிறேன். எனக்கு அன்றாடம் சொற்ப அளவிலான வருமானம் தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதன் மூலம் என்னுடைய குடும்பத்தை நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி

உலகநாதன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், அங்குள்ள கடைக்காரர்கள் என அனைவருக்கும் நன்கு பழக்கமானவர். பேட்டி எடுத்து கொண்டு இருக்கும்போதே, சில ஊழியர்கள் அவரிடம் விளையாட்டாக பேசி மகிழ்ந்ததை பார்க்கும்போது அது நன்றாக தெரிந்தது. ‘சாமி இதனால எனக்கு எதுவும் பிரச்சினை வராதுல?’ என்று அப்பாவித்தனமாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்.

உழைக்கும் நோக்கில் உலகநாதன் ஓடினாலும், ரெயில் வராத நேரங்களில் சென்டிரலுக்கு வரும் சில பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதை காட்டி உதவி செய்து, மனிதநேயத்திலும் வெற்றி பெறுகிறார்.

இறுதியில் நான் அடுத்த ரெயில் வருவதற்குள் ‘டீ’ சாப்பிட்டுவிட்டு வருகிறேன் தம்பி... என்று கூறி அங்கிருந்து விறு விறுவென்று உலகநாதன் நடந்து சென்றார்.

மேலும் செய்திகள்