அரசு ஆஸ்பத்திரியில் தந்தையின் சிகிச்சைக்காக குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி நின்ற சிறுமி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை

அவுரங்காபாத் அரசு ஆஸ்பத்திரியில் தந்தையின் சிகிச்சைக்காக குளுக்கோஸ் பாட்டிலை சிறுமி கையில் பிடித்தப்படி நின்றுள்ளார்.

Update: 2018-05-10 22:30 GMT
அவுரங்காபாத், 

அவுரங்காபாத் அரசு ஆஸ்பத்திரியில் தந்தையின் சிகிச்சைக்காக குளுக்கோஸ் பாட்டிலை சிறுமி கையில் பிடித்தப்படி நின்றுள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அறுவை சிகிச்சை

அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் தாலுகா பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி(வயது54). இவர் அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தன்று அங்கு இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு நரம்பு ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. ஆனால் அப்போது ஆஸ்பத்திரியில் குளுகோஸ் பாட்டிலை தொங்கவிடும் சாதனம் பற்றாக்குறையாக இருந்ததுள்ளது. எனவே ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கிருந்த ஏக்நாத் கவாலியின் 9 வயது மகளிடம் அந்த குளுக்கோஸ் பாட்டிலை கொடுத்து அதை தாங்கி பிடித்தபடி நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி தனது தந்தை சிகிச்சை பெறுவதற்காக குளுக்கோஸ் பாட்டிலை அரை மணி நேரத்துக்கு கையில் தூக்கிப்பிடித்தபடி நின்றுள்ளார்.

வலைதளத்தில் பரவிய புகைப்படம்

இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த சிலர் சிறுமி குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்தப்படி நிற்பதைக் கண்டனர். இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வலைதளத்த்தில் வேகமாக பரவிய இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரியின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் கண்ணன் எடிகர், ‘சிறுமி கையில் குளுக்கோஸ் தாங்கி நின்ற சம்பவம் உண்மைதான். ஆனால் அவர் சில நிமிடங்களே அவ்வாறு நின்றார். அதற்குள்ளாக குளுக்கோஸ் பாட்டில் தாங்கிகள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் சரிசெய்யப்பட்டன. இருந்தாலும் சிறுமியை அவ்வாறு நிற்க வைத்த ஆஸ்பத்திரி ஊழியர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்