அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-05-10 22:47 GMT
அரியலூர், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண் காணிப்பு அலுவலரும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர் களிடம் துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண் காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்து துறை சார்ந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். ஆழ்குழாய் கிணறுகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக, ரெங்க சமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதை அவர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்