திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-05-11 07:15 GMT
திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மையத்தின் சமரச மன்ற குழுத்தலைவர் அருள், இணைச்செயலாளர் காளிமுத்து, தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தஞ்சை-நாகை வழித்தடத்தில் இயக்கப்படும் சரக்கு ரெயிலால் அவ்வப்போது பயணிகள் ரெயில்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க தஞ்சை-நாகை வழி தடத்தை இரட்டை ரெயில் பாதையாக அமைக்க வேண்டும்.

திருவாரூர்-தஞ்சை, திருவாரூர்-மயிலாடுதுறை போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரெயில்களில் போதிய தண்ணீர் வசதி இன்றி கழிவறை சுகாதாரமாக பராமரிக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தண்ணீர் மற்றும் கழிவறை குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை விளம்பரபடுத்த வேண்டும். இந்த குறையை நிவர்த்தி செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூர் ரெயில் நிலையத்தில் செயல்படும் வாகன காப்பகம் உரிய வசதிகள் இன்றி திறந்த வெளியில் செயல்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருவாரூர் பஸ் நிலையத்தில் கழிப்பறை உரிய பராமரிப்பு இன்றி கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்