குன்னத்தூரில் தனியார் மருத்துவமனையில் தூக்குப்போட்டு நோயாளி தற்கொலை

குன்னத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிகிச்சை பெற்று வந்தவரின் இந்த விபரீத முடிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-05-11 22:00 GMT
குன்னத்தூர்,

திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 63). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பழனிச்சாமிக்கு 2 கால்களிலும் புண் இருந்துள்ளது. இந்த புண்ணால் பழனிச்சாமி நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார். மேலும் தினமும் வலியால் துடித்த பழனிச்சாமி, குன்னத்தூர் இந்திரா நகரில் உள்ள சுபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 5-ந் தேதி சென்றார்.

பின்னர் அந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து தனி அறையில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் பழனிச்சாமியின் கால்களில் உள்ள புண்கள் குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் பழனிச்சாமி தனக்கு ஒதுக்கிய அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். அதன்பின்னர் அந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியர்கள் பழனிச்சாமியின் புண்ணிற்கு மருந்து போட அவருடைய அறைக்கு சென்றனர். அங்கு பழனிச்சாமி இருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், அவருடைய பெயரை கூறி, கதவை திறக்குமாறு செவிலியர்கள் கூறினார்கள். நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், அங்கு வந்து அந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள குளியலறையில் பழனிச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குன்னத்தூரில் தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்