அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-05-11 22:15 GMT
தளி,

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலைகளை நீராதாரமாகக்கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு விட்டன. இதனால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து நின்றுபோனது. அதைத்தொடர்ந்து பாசன நிலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளும் தேவையான அளவு உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தன. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவுசெய்து கொள்வதற்காக அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் அமராவதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர்வரத்து ஏற்படும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள அமராவதி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அமராவதி அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் இருப்பு ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணைப்பகுதியில் நேற்றைய நிலவரப்படி 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 33 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிறிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

மேலும் செய்திகள்