கிரண்பெடி பேச்சை நாராயணசாமி மொழிபெயர்த்தார்: நட்பு நீடிக்க வேண்டும் என்று கவர்னர் பேச்சு

புதுவையில் நடந்த கம்பன் விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசுகையில் நட்பு நீடிக்க வேண்டும் என கூறினார். அவரது பேச்சை முதல்-அமைச்சர் நாராயணசாமி மொழிபெயர்த்தார். இதனால் தலைவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது.

Update: 2018-05-11 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை கம்பன் கழகம் சார்பில் 53-ம் ஆண்டு கம்பன் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது.

விழாவுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கம்பன் கழக புரவலரான முதல்-அமைச்சர் நாராயணசாமி வரவேற்று பேசினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு கம்பன் விழாவினை தொடங்கிவைத்தார். விழாமலரை சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட கவர்னர் கிரண்பெடி, ஐகோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கம்பன் விழாவினை தொடங்கிவைத்த கவர்னர் கிரண்பெடி ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். தனது பேச்சு எல்லோருக்கும் புரியுமா? ஆங்கிலம் தெரிந்தவர்கள் கையை தூக்குங்கள் என்றார். அப்போது பெரும்பாலானவர்கள் கையை தூக்கினார்கள். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களை கைதூக்க சொன்னபோது குறைந்த அளவிலேயே தூக்கினார்கள்.

எனவே அவர்களுக்கும் தான் பேசுவது தெரியவேண்டும் என்பதற்காக தனது பேச்சை மொழி பெயர்க்க கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளரும் நியமன எம்.எல்.ஏ.வுமான செல்வகணபதி கவர்னரின் பேச்சை மொழி பெயர்க்க முன்வந்தார்.

ஆனால் அவர் மொழி பெயர்ப்பின்போதும் ஆங்கிலத்தில் பேசவே, கல்வி அமைச்சர் கமலக்கண்ணனை கவர்னர் கிரண்பெடி மொழி பெயர்க்க அழைத்தார். அமைச்சர் கமலக்கண்ணனும் வந்து, தனக்கு தெரிந்த அளவில் மொழி பெயர்ப்பதாகவும், ஏதாவது தவறு இருந்தால் அறிஞர்கள் மன்னிக்கவேண்டும் என்று கூறினார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த நீதிபதி ராமசுப்ரமணியன், இதுதொடர்பான தீர்ப்பை நான் சொல்கிறேன் என்று வேடிக்கையாக கூறினார். அமைச்சரும் மொழி பெயர்ப்புக்கு பின்வாங்கியதால், முதல்-அமைச்சர் நாராயணசாமியை மொழி பெயர்க்க கவர்னர் கிரண்பெடி அழைத்தார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் என்று குறிப்பிட்டார். பின்னர் பேச்சை தொடங்கிய கவர்னர் கிரண்பெடி, தான் பேசுவதை மட்டும் மொழி பெயர்த்து கூறுமாறும், அடுத்த 10 நிமிடத்திற்கு முதல்-அமைச்சரை நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி, தானும் அந்நிமிடம் வரை மட்டுமே கவர்னர் கிரண்பெடியை நம்புவதாக தெரிவித்தார். இதையடுத்து தானும் முதல்-அமைச்சரை நம்புவதாகவும், இந்த நட்பு நீடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே நடந்த இந்த திடீர் சமரச உரையாடல் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஏனெனில் கவர்னர் கிரண்பெடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சில நாட்கள் ஒருவரையொருவர் விமர்சிப்பதும், பின்னர் அமைதியாக இருப்பதும் வாடிக்கையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்