நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை - கே.ஆர்.விஜயா பேட்டி

‘நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை‘ என்று சேலத்தில் நடிகை கே.ஆர்.விஜயா கூறினார்.

Update: 2018-05-11 22:45 GMT

சேலம்,

‘சரணம் பல்லவி‘ என்ற புதிய சினிமா படத்தை சேலத்தை சேர்ந்த சாய் இளவரசன் இயக்குகிறார். இதில் சேலத்தை சேர்ந்த ரிஸ்வான் கதாநாயகனாகவும், பிரியங்கா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். படத்தில் வில்லனுடைய அக்காவாக பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கிறார். இந்த படத்தில் அவர் மக்களுக்கு சேவை செய்வதோடு, காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்படிப்பு நேற்று சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இதில் கே.ஆர்.விஜயா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– இந்த படத்தின் கதை வித்தியாசமாக உள்ளதால் நடிக்கிறேன். தற்போது அனைவரின் வாழ்க்கையும் வித்தியாசமாக செல்கிறது. அனைத்துமே வேகமாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டுமே டப்பிங்கில் எடுக்கப்படும். ஆனால் தற்போது படம் முழுவதும் டப்பிங்கில் எடுக்கப்படுகிறது. இன்னும் பல நல்ல நடிகர்கள் சினிமாவுக்கு வரவேண்டும்.

சினிமா என்பது கடல் போன்றது. சினிமா மூலம் பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் சினிமாவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, மக்களுக்கு ஏராளமான அறிவுரைகள் கூறி உள்ளனர். முன்புபோல் தற்போதைய படங்களில் கதைகள் இருப்பதில்லை. தற்போது வேறு விதமான கதையுடன் படங்கள் வருகிறது. கடைசி மூச்சு இருக்கும்வரை நான் தொடர்ந்து நடிப்பேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனித்திறமை உண்டு.

எந்த நடிகருக்கும் அறிவுரை சொல்லும் அளவில் நான் இல்லை. அதேபோன்று நடிகர், நடிகைகள் கிசுகிசுவிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானே செத்துப்போனதாக செய்திகள் பரப்பப்பட்டன. அதையும் தாண்டி நான் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து, ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து உள்ளனர். தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநகராட்சி முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்