கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு மேற்கொள்ள வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு மேற்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-11 21:02 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வது மிகவும் அவசியம் ஆகும். கோடை மழை பெய்த உடன் நிலத்தின் சரிவின் குறுக்கே ஆழச்சால் முறையில் கோடை உழவு செய்திட வேண்டும். இதனால் நிலத்தில் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் கூண்டுப் புழுக்கள் முட்டைகள் வெளிக்கொணரப்பட்டு சூரிய வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்பட்டு பூச்சிகள் பெருக்கம் அடையாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

மண்ணில் உள்ள களைகள் மற்றும் களை விதைகள் சூரிய வெப்பத்தின் மூலம் கட்டுப் படுத்தப்படுகிறது. மண் பொளபொளப்பாக மாறுவதால் மண்ணில் நீர் உறிஞ்சப்பட்டு நீர் பிடிப்பு திறன் பெருகி மண் வளத்தை கூட்டுகிறது. நிலத்தின் சரிவில் உழவு செய்வதினால் மழைநீர் மண்ணில் உறிஞ்சப்பட்டு மண் அரிமானத்தை தடுத்து மழைநீர் வீணாகாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. வறட்சியை தாங்கி பயிர்கள் வளர ஏதுவாக அமைகிறது.

அதிக மகசூல்

இதனால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பாக அமையும். மேலும், விவசாயிகள் கடந்த ஆண்டு பயிர் செய்த பருத்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின் அறுவடைக்கு பின் உள்ள காய்ந்த செடிகளை வயலிலிருந்து அப்புறப்படுத்தி தனியாக ஓர் இடத்தில் வைத்து எரித்து விட வேண்டும். வயலிலேயே எரித்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும். இந்த தகவலை பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சந்தானகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்