மதுபோதையில் ரகளை நண்பர் எறிந்த கத்தியால் பறிபோன வாலிபரின் உயிர்

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அவரது நண்பர் எறிந்த கத்தி குத்தியதில் பலியானார்.

Update: 2018-05-11 23:00 GMT
மும்பை, 

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அவரது நண்பர் எறிந்த கத்தி குத்தியதில் பலியானார்.

ரகளையில் ஈடுபட்டார்

நவிமும்பை, உல்வே செக்டார் 2-ல் வசித்து வந்தவர் விஷால் மோகன் (வயது17). இவர் சம்பவத்தன்று உல்வே பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் சலூனுக்கு சென்றார். அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.

இதில் போதை தலைக்கேறியதால் விஷால் மோகன் ரகளையில் ஈடுபட்டார். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை.

கத்தியை எறிந்தார்

இதனால் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் சலூனில் இருந்த கத்தியை எடுத்து விஷால் மோகன் மீது எறிந்தார். இதில் கத்தி அவரின் தொடையில் ஆழமாக குத்தியது. இதனால் வாலிபரின் உடலில் இருந்து ரத்தம் அதிகளவு வெளியேறியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பணம் இல்லாததால் அங்கு வாலிபருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நண்பர்கள் வாலிபரை நவிமும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஷால் மோகனின் நண்பர்கள் சுல்தான் (20), லக்கான்(22), கானி (21)ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்