தேன்கனிக்கோட்டையில் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

தேன்கனிக்கோட்டையில் உள்ள தேவராஜன் ஏரிக்கு ஜாபர்பாஷா என்ற வாலிபர் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Update: 2018-05-12 05:09 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அனீப். இவருடைய மகன் ஜாபர்பாஷா (வயது 23). நேற்று முன்தினம் ஜாபர்பாஷா கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்காவிற்கு தொழுகைக்காக வந்தார். இதையொட்டி அவர் நேற்று முன்தினம் இரவு தர்காவிலேயே தங்கினார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தேன்கனிக்கோட்டையில் உள்ள தேவராஜன் ஏரிக்கு ஜாபர்பாஷா குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. ஜாபர்பாஷாவிற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைப் பார்த்து அவருடன் குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஜாபர்பாஷாவை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

இது குறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி ஜாபர்பாஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜாபர்பாஷா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சேற்றில் சிக்கியிருந்த அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்