திருவாரூரில் 250 பேருக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் 250 பேருக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

Update: 2018-05-12 05:28 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சக்திமணி தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 210 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி, 40 பேருக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 13 மதிப்பில் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 8 ஆயிரத்து 13 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று முதல் கையெழுத்திட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்க நாணயம் 8 கிராமாக உயர்த்தி வழங்கினார். அவருடைய வழியில் அனைத்து திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பசி பட்டினி இல்லாத நிலை உருவாகி உள்ளது. மேலும் இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் விலையில்லா அரிசி, திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லாடார்லிங், கண்காணிப் பாளர் லூர்து பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்