முதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி

முதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

Update: 2018-05-12 10:52 GMT
மசினகுடி,

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகமும் ஒன்று. 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரியவந்தது. வனப்பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான முதல் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியினை முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா தொடங்கி வைத்தார். முன்னதாக கடந்த 10-ந் தேதி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள பயிற்சி அரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 36 குழுக்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை ஆகிய 4 சரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு குழுவிலும் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர் என 3 பேர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் தினந்தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லும் இந்த குழுவினர் நேரடி கணக்கெடுப்பு மற்றும் புலிகளின் கால்தடம், எச்சம் உள்ளிட்டவற்றை கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர். அத்துடன் நீர் நிலைகளுக்கு சென்றும் கணக்கெடுத்து வருகின்றனர். களபணியின் போது அவர்கள் எடுக்கும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் செல்போன் ஆப் மூலம் பதிவு செய்கின்றனர். நேற்று காலை தொடங்கிய கணக்கெடுப்பு பணி வருகிற 15-ந்தேதி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் 16-ந்தேதி அனைத்து குழுவினரும் சேகரித்த தகவல்களை வனத்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், 36 குழுக்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் முதுமலை புலிகள் காப்பகத்தில் போதிய ஊழியர்கள் இருப்பதால் தன்னார்வலர்கள் யாரும் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதி கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் வெளிமண்டல பகுதியில் உள்ள மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று கூறினார்.

இந்த கணக்கெடுப்பின் போது புலிகள் மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளும் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் செய்திகள்