கல்வராயன்மலையில் 5,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு, போலீசார் நடவடிக்கை

கல்வராயன்மலையில் 5 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2018-05-12 22:15 GMT
கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், கிள்ளிவளவன் மற்றும் ஆயுதப்படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் சேத்தூர், கிணத்தூர், வாத்தியார்காடு, சின்னதிருப்பதி, நாரணபட்டி, மட்டப்பட்டு, மண்டகப்பாடி ஆகிய வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கிணத்தூர், சேத்தூர் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளிலும், வாத்தியார் காடு ஓடையிலும் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 5 ஆயிரத்து 500 லிட்டர் ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த போலீசார் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் கிணத்தூர் பெரியாற்று ஓடையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் போலீசார் கண்டுபிடித்து, கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக கிணத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), சுந்தரமூர்த்தி(40) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கல்வராயன்மலை நோக்கி வந்த பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அதில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பேரலை கைப்பற்றிய போலீசார், அதனை கொண்டு வந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்