கொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

கொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல சோழவந்தானில் ஆவணங்களின்றி மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

Update: 2018-05-12 21:45 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள பாலாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், ஏட்டுகள் தினேஷ், முனிகா உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பள்ளபட்டி, பொட்டப்பட்டி, குருவார்பட்டி, நாகமங்கலம் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது நாகமங்கலம் பகுதியில் உள்ள பாலாற்றில் சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்து, விசாரித்து வந்தனர். அதில் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள நாகமங்கலத்தை சேர்ந்த காஷா மகன் இதயத்துல்லா (வயது 30) என்பவர் அனுமதியின்றி பாலாற்றில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதயத்துல்லாவை தேடி வருகின்றனர்.

இதேபோல சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வந்தன. இதைப்பார்த்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் லாரிகளை சிறை பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் அய்யரூ உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 லாரிகளையும் சோழவந்தான் போலீஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்