சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்க கட்டிகள் சிக்கியது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது

பூந்தொட்டிகளில் மறைத்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-05-12 20:48 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த விமானங்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சவுதிஅரேபியா ரியாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த உசேன் ஷேக்(வயது 40) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர்.

ரூ.28 லட்சம் தங்க கட்டிகள்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அலங்கார பூந்தொட்டிகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் அந்த பூந்தொட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து 925 கிராம் எடைகொண்ட 9 தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அவற்றின் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இது தொடர்பாக உசேன் ஷேக்கை கைது செய்தனர். அவர், அந்த தங்க கட்டிகளை யாருக்காக ரியாத்தில் இருந்து கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்