போடி அருகே அரசு அதிகாரி மீது தாக்குதல்: 3 பேருக்கு வலைவீச்சு

போடி அருகே அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-05-12 22:15 GMT
போடி,

போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் செல்லராஜா (வயது 48). சம்பவத்தன்று இவர், போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் துப்புரவு பணியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நல்லவீரு, சிவந்தியப்பன், செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர்.

கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்யாமல் வேறு துப்புரவு பணிகளை செய்கிறீர்களே? என்று செல்லராஜாவிடம் கேட்டு அவர்கள் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்லராஜாவை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து செல்லராஜா, போடி வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணிக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பாரதமணி புகார் செய்தார். அதில், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து அதிகாரியை தாக்கிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லவீரு, சிவந்தியப்பன், செல்வம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்