கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்: கடும் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில், விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-12 22:30 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் களை கட்டியுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க பலரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கேரளா உள்ளிட்ட வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே 5 ஆயிரத்துக்கும், மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளிநீர் வீழ்ச்சி முதல் மோயர்பாயிண்ட் வரை சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வாகனங் கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போதுமான போலீசார் இல்லாத காரணத்தால் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக மோயர்பாயிண்ட், பில்லர்ராக், குணாகுகை, பைன்பாரஸ்ட் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்