முதுகு பாதிப்பும்.. முயற்சியும்..

கரோலினா ஓர்டேகா, அமெரிக்காவின் மியாமியை சேர்ந்த ஆய்வாளர். சமீபத்தில் இவர் பாஸ்டன் மாரத்தானில் பங்கேற்றார். இதிலென்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா?

Update: 2018-05-13 09:37 GMT
 கரோலினா முதுகுத் தண்டுவட பாதிப்புக்கு ஆளானவர். ஒருநாள் திடீரென்று தாங்கமுடியாத வலியை உணர்ந்திருக்கிறார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது தண்டுவடத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும் என்றும், அதன் பிறகு சகஜமாக நடப்பது கூட சிரமமாகிவிடும் என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். வலியில் இருந்து மீள்வதற்கு ஒரே தீர்வாக அறுவை சிகிச்சை அமைந்ததால் அதற்கு சம்மதித்திருக்கிறார். டாக்டர்கள் கூறியது போலவே அறுவை சிகிச்சைக்கு பிறகு நடப்பதற்கே சிரமப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் போராடி நடைப் பயிற்சியை தொடங்கியவர், பின்பு ஓடுவதற்கும் முயற்சித்திருக்கிறார். இரண்டாண்டு கடின பயிற்சி அவரை உற்சாகமாக நடக்க, ஓட வைத்திருக்கிறது. பாஸ்டன் மாரத்தானில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்று பந்தய தூரத்தையும் முழுமையாக ஓடி கடந்துவிட்டார். அவரது இந்த முயற்சி டாக்டர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

‘‘அறுவை சிகிச்சைக்கு பிறகு கரோலினா மீண்டும் நடப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்பு இருந்தது. ஆனால் ஓடுவதற்கு ஒரு சதவீத வாய்ப்பே இருந்தது. கரோலினா மாரத்தானில் ஓடியது அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும்’’ என்கிறார், கரோலினாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர். 

மேலும் செய்திகள்