தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மூலம் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Update: 2018-05-13 22:00 GMT

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள பாலாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேலுசாமி உள்ளிட்ட போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நாகமங்கலம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பாலற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து மணலுடன் இருந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றிய விசாரணையில் சிவகங்கை மாவட்டம் கே.புதுப்பட்டியை சேர்ந்த மணிவேல் என்பவர் மணல் அள்ளியது தெரியவந்தது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மணிவேலை தேடிவருகின்றனர்.

அரசு அனுமதியின்றி கொட்டாம்பட்டி பகுதிகளில் மண், மணல் அதிக அளவில் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், மேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மேற்பார்வையில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொட்டம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையால் தொடர்ந்து 4 நாட்களாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததாக லாரிகள், டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்