திருச்சி அருகே நவல்பட்டு ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய 500 காளைகள்

திருச்சி அருகே நவல்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500 காளைகள் களம் இறங்கின. காளைகளை போட்டி போட்டு அடக்க முயன்ற 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-05-13 23:00 GMT
திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு நவலி குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 450 வீரர்கள், காளைகளை அடக்க பதிவு செய்திருந்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனைகள் முடிந்த பிறகு காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை உதவி கலெக்டர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது பல காளைகளை அதன் திமிலை பிடித்து மாடு பிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை கொம்பால் தூக்கி வீசியும், கீழே தள்ளி காலால் மிதித்து விட்டும் பிடிபடாமல் ஓடின. போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

காளைகளை அடக்க முயன்ற போது நவல்பட்டை சேர்ந்த பிரதீப்(வயது 19), மகேஷ்(35), கிளிக்கூடு தினேஷ்(25), பூலாங்குடி மனோகர்(30) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். மதியம் 2 மணியளவில் ஜல்லிக்கட்டை முடிக்குமாறு உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மழை வரும் அறி குறிகள் தெரிந்ததால் மதியம் 2 மணியோடு முடித்துக்கொள்ளப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மின் விசிறி, கட்டில், நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, சோபா செட் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நவல்பட்டு கிராமத்தினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்