அதிகம் பேசுபவர்களுக்கு சொல்லின் செல்வர் பட்டம் கம்பன் விழாவில் இலங்கை ஜெயராஜ் வேதனை

அதிகம் பேசுபவர்களுக்கே சொல்லின் செல்வர் பட்டம் வழங்கப்படுவதாக கம்பன் விழாவில் இலங்கை ஜெயராஜ் பேசினார்.

Update: 2018-05-13 22:00 GMT

புதுச்சேரி,

புதுவை கம்பன் விழா நேற்று 3–வது நாளாக நடந்தது. இந்த விழாவில் பாவலர்மணி–சித்தன் அறக்கட்டளை சார்பில் சிந்தனை அரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இலங்கை ஜெயராஜ் தலைமை தாங்கினார். தூதும் வாதும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசுந்தரமும், தோன்றலும் இறத்தலும் என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜாகோபாலனும் பேசினார்கள்.

சிந்தனை அரங்கத்துக்கு தலைமை தாங்கிய இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:–

மனிதனுக்கு கிடைத்த சிறந்த அடையாளம்தான் பேச்சு. மிகவும் குறைவாக தெளிவாக பேசுபவர்களுக்கு சொல்லின் செல்வர் பட்டம் வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது அதிகமாக பேசுபவர்கள்தான் அந்த பட்டத்தை பெறுகின்றனர். கம்பன் சொல்லின் செல்வன் பட்டத்தை அனுமனுக்கு கொடுத்துள்ளான்.

இல்லறத்தில் இன்சொல்லும், துறவரத்தில் சத்தியமும், அரசியலில் சொல்வன்மையும், காதலில் பொய் என 4 விதமான பேச்சுகள் இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அனுமனிடம் இந்த 4 விதமான பேச்சுத்திறமையும் இருந்தது. அனுமன் சீதையை சந்தித்தபோது குறைவான சொற்களை பயன்படுத்தி நிறைவாக பேசினான்.

பிறப்பு, இறப்பு ஆகிய 2 சொற்களுக்கும் என்ன பொருள் என்பதை உணர்ந்துவிட்டால் தத்துவஞானியாகிவிடலாம். நான் யார்? ஏன் இங்கு பிறந்தேன்? என்னுடைய வலிமை என்ன? என்பதை அறியவேண்டும். உலகில் வாழ்வதுதான் மெய்வாழ்க்கை என பொய்யாக நினைத்து இறப்பை சந்திக்க பயப்படுகிறோம்.

மரணம் என்பது உறக்கம் போன்றதுதான். அதைக்கண்டு அஞ்ச தேவையில்லை. ஆன்மாவிற்கு ஓய்வு கொடுக்கத்தான் மரணம் படைக்கப்பட்டுள்ளது. இறவாமை வேண்டாம் என்றால் பிறவாமல் இருக்கவேண்டும். மரணத்தை ஆராய்ந்தால் முக்தி தெரியும்.

இவ்வாறு இலங்கை ஜெயராஜ் பேசினார்.

அதைத்தொடர்ந்து சரகனபவானந்த குருக்கள் தலைமையில் தனியுரை நிகழ்ச்சி நடந்தது. தாய் தன்னை அறியாத கன்றில்லை என்ற தலைப்பில் த.பாண்டியன் பேசினார். மாலையில் பரசுராமன் தலைமையில் சிந்தனை உரை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அணிகளின் அணிநடை–கம்பனின் காவிய இயல் என்ற பொருளில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

அதையடுத்து பிறருக்கு இன்னல் இழைத்தோரில் முன்நிற்பவர் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் மேல் முறையீடு நடந்தது. இதில் இசை கலைவன் முன்னிலையில் நடுவர்களாக அப்துல்காதர், அன்பரசு ஆகியோர் இருந்தனர். விழாவில் நிறைவாக நாட்டி அரங்கம் நடந்தது. இதில் பக்தன் நடனக்குழுவினரின் கம்பராமாயணம் நாட்டிய நாடகம் நடந்தது.

மேலும் செய்திகள்