குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி போலீசார் சமரசம்

மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

Update: 2018-05-13 23:00 GMT
மத்தூர்,

மத்தூர் அருகே உள்ளது நாகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை கடந்த 2 மாதமாக நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் இடும்பன் கோவில் அருகில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று திரண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு என்ன பிரச்சினை என விசாரித்தார். அப்போது குடிநீர் பிரச்சினை காரணமாக சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகம், நாகம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாதையன், கதிர்வேல் உள்பட பலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆழ்துளை கிணறு உள்ள இடத்தை பார்வையிட்டார்.

அங்கிருந்து சிறு மின்விசை நீர்தேக்க தொட்டிக்கு உடனடியாக பைப்லைன்கள் அமைத்து நீரை ஏற்றும்படியும், அதன் மூலம் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்