நாமக்கல்லில் கோடைகால உணவு விழிப்புணர்வு அரங்கு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

நாமக்கல்லில் கோடைகால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அரங்கை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2018-05-13 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் பொதுமக்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் நரசிம்மசாமி கோவில் முன்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அரங்கினை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பாற்ற உணவு குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

விழிப்புணர்வு வாசகம்

அதை தொடர்ந்து அமைச்சர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சில்லரை அங்காடி உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு அறிவிப்பு பதாகைகளை வழங்கி, அவற்றை அவரவர் உணவு வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் பார்வையில் எளிதில் படும்படி காட்சிப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு வகைகள் குறித்த காட்சிப்படுத்துதல் மற்றும் விளக்கப்படுத்துதல் முகாமினை பார்வையிட்டு, அதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினரிடம் விளக்கங்களை கேட்டறிந்தனர்.

பின்னர், கோடை கால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீசுகள் மற்றும் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க அச்சிடப்பட்டு உள்ள வாட்ஸ்-அப் எண் கொண்ட நோட்டீசுகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.அதில் டீ தூள், எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களில் மேற்கொள்ளப்படும் கலப்படங்களை கண்டறிதல் மற்றும் வண்ணங்களை தவறான முறையில் ஏற்றி நுகர்வோரை ஏமாற்றும் வகைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

இந்த கண்காட்சியானது மே மாதம் இறுதி வரை நடைபெறும் என கூறிய அமைச்சர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, கோடை காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வழி முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்