போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

முசிறி அருகே போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-13 22:15 GMT
முசிறி,

முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. வக்கீல். இவருடைய மகன்கள் பிரவீன்குமார்(வயது 24), அபினேஷ்(22). இதில் அபினேஷ் திருச்சி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆசைத்தம்பி மற்றும் அவருடைய மகன்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி ஆசைத்தம்பிக்கும், அவருடைய மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை கிராம முக்கியஸ்தர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

4 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அபினேஷ் ஆகியோர் அவர்களுடைய நண்பர்கள் லோகேஷ், மதனுடன் ஊர் முக்கியஸ்தர்களை அரிவாளால் வெட்ட சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உமர்முக்தா, மோகன் ஆகியோர் தடுக்க முயன்றனர்.

அப்போது அவர்களை பிரவீன்குமார் உள்ளிட்டோர் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த போலீசார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் முசிறி பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன்குமார், அபினேஷ், மதன், லோகேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்