கவுரவத்துடன் வழங்கினால் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்

தலித் எனக் கூறி கொடுத்தால் முதல்-மந்திரி பதவியை ஏற்கமாட்டேன் என்றும், கவுரவத்துடன் வழங்கினால் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார் என்றும் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-13 22:00 GMT
பெங்களூரு, 

தலித் எனக் கூறி கொடுத்தால் முதல்-மந்திரி பதவியை ஏற்கமாட்டேன் என்றும், கவுரவத்துடன் வழங்கினால் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார் என்றும் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி பதவி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அச்சமுதாய தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர். இருப்பினும் காங்கிரஸ் சார்பில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

அதேப் போல் கர்நாடக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும், முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுக்கும், தலித் சமுதாயத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது? என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது. அதில் சித்தராமையாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததால், அவரே முதல்-மந்திரி நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.

பதவி ஏற்க தயார்

அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் மல்லிகார்ஜுன கார்கே தேசிய அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். அவருக்கு கட்சி மேலிடம், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த நிலையில் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக தேர்வு செய்தால் வரவேற்பேன் என்று தெரிவித்தார்.

இதுபற்றி மல்லிகார்ஜுன கார்கேவிடம் கலபுரகியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் தான். ஆனால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு முதல்-மந்திரி பதவியை கட்சி மேலிடம் எனக்கு வழங்கினால், பதவி ஏற்கமாட்டேன். என்னை கட்சியின் மூத்த தலைவர் என்ற தார்மீக ரீதியில் கவுரவமாக முதல்-மந்திரி பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கும் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே ‘கர்நாடகத்திற்கு ஒரே ஒரு முதல்-மந்திரி தான். தலித் முதல்-மந்திரி, ஒக்கலிக முதல்-மந்திரி, லிங்காயத் முதல்-மந்திரி, குருபா முதல்-மந்திரி என சொல்லக்கூடாது. இந்த கேள்வியே பொருத்தமற்றது‘ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்